திருமலை: ஆந்திர மாநிலத்தில் கோடைக்காலம் என்பதால் மின்சார பயன்பாடு அதிகரித்து வருவதால் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மின்துறை அதிகாரிகள் மாநிலம் முழுவதும் பல மணிநேரம் மின்வெட்டு செய்து வருகின்றனர். மின்வெட்டு காரணமாக அரசு மருத்துவமனைகளில் செல்போன் லைட், மெழுகுவர்த்தி, டார்ச்லைட் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகள், குழந்தைகள் மற்றும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக மெழுகுவர்த்தி மற்றும் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிராமங்களில் 6 முதல் 8 மணி நேரமும், நகரங்களில் 4 மணி முதல் 6 மணி நேரம் வரை மின்வெட்டு அமலில் உள்ளது. வாரத்தில் 2 நாட்கள் தொழிற்சாலைகள் மின்வெட்டு காரணமாக கட்டாயம் விடுமுறை அளிக்க வேண்டும் என மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆந்திராவில் கடும் மின் தட்டுப்பாடால் டார்ச் வெளிச்சத்தில் சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.