கரூர்: உடற்பயிற்சியை வலியுறுத்தி கரூரில் தொடங்கப்பட்ட ‘Walk Karur Walk’ திட்டத்தை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்து, நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
இந்திய தொழில் கூட்டமைப்பின் (சிஐஐ) கரூர் கிளை, யங் இன்டியன்ஸ் சார்பில் உடற்பயிற்சியை வலியுறுத்தி ‘Walk Karur Walk’ என்ற திட்டத்தை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கரூர் வரப்பாளையத்தில் உள்ள தனியார் தோட்டத்தில் இன்று (ஏப். 10ம் தேதி) காலை தொடங்கி வைத்து சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது யங் இன்டியன்ஸின் ஒரு திட்டமான பெண் குழந்தைகள் மத்தியில் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மசூம் (MASOOM) என்ற அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து, அமைச்சர் கையெழுத்திட்டார்.
இந்நிகழ்வில் யங் இன்டியன்ஸ் தலைவர் ராகுல், துணைத்தலைவர் அருண், சிஐஐ துணைத்தலைவர் செந்தில், முன்னாள் தலைவர் சேதுபதி, முன்னாள் யங் இன்டியன்ஸ் தலைவர் வெங்கட்ராகவன், மசூம் பொறுப்பாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் உடனிருந்தனர். அமைச்சர் செந்தில்பாலாஜி யங் இன்டியன்ஸின் கவுரவ உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.