சென்னை : 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இன்று தொடங்கியுள்ளது.
கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், தனியார் மருத்துவமனை தடுப்பூசி மையங்களில் இன்று முதல் 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது.மேலும் ஒரு டோஸ் தடுப்பூசிக்கு ரூ.225 விலையாக நிர்ணயம் செய்து இருந்தது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இன்று முதல் பூஸ்டர் டோஸ தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது.
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. இது குறித்து தனியார் மருத்துவமனையைகள் தரப்பில், “தமிழகத்தில் உள்ள 76 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இவ்வாறு 2 டோஸ் செலுத்தி கொண்டு 9 மாதங்கள் நிறைவடைந்த பிறகுதான் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பலர் இன்னும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தத் தகுதி பெறாமல் உள்ளனர். தகுதி பெற்றுள்ள ஒரு சிலரும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவதில்லை. எனவே இன்று குறைவான தனியார் மருத்துவமனைகளில்தான் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசு, பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய விவரம், கோவின் இணையளத்தில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், முன்பு வெளியிட்ட வழிகாட்டுதல்களை தனியார் கரோனா தடுப்பூசி மையங்கள் பின்பற்ற வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி செலுத்த, மருந்தின் விலைக்கு மேலாக ரூ.150 வரை சேவை கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.
விலை குறைப்பு: கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ.600 ஆக இருந்தது. மத்திய அரசுடன் நடத்திய ஆலோசனைக்குப்பின் இதை ரூ.225-க்கு வழங்க முடிவு செய்யப்பட்டதாக இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதார் பூனாவாலா கூறியுள்ளார்.
இதேபோல் ரூ.1,200-க்கு விற்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசி விலையையும் ரூ.225-ஆக குறைக்க முடிவு செய்துள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணை நிறுவனர் சுசித்ராவும் தெரிவித்துள்ளார்.