“நாதஸ்வர சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாச்சலத்திற்கு மணிமண்டபம் அமைக்கவும், அவரது நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாடவும் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வரிடம் கோரிக்கை வைப்பேன்” என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இன்று நெல்லையில் நடைபெற்ற தென்மண்டல நாதஸ்வர தவில் கலைஞர்கள் சார்பில் நடைபெற்ற காருகுறிச்சி அருணாச்சலம் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட அவர், அப்போது இந்த பேட்டியை அளித்தார்.
நெல்லை மாவட்டம் காருகுறிச்சியில் பிறந்தவர் அருணாச்சலம். சிறுவயதிலேயே நாதஸ்வர கலையில் ஆர்வம் கொண்ட அவர், தஞ்சாவூர் சென்று கற்று அதில் வியத்தகு சாதனைகள் படைத்தவர். சாமானியர் முதல் ஜனாதிபதி வரை கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அவருக்கு தென்மண்டல நாதஸ்வர தவில் கலைஞர்கள் சார்பில் நெல்லை டவுன் லட்சுமி திருமண மஹாலில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
இதில் கலந்துகொண்ட திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நிகழ்ச்சியில் பேசும்போது, காருகுறிச்சி அருணாசலத்தின் இசை திறமை குறித்து வியந்து பாராட்டினார். மேலும் தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் தவில் நாதஸ்வரம் வாசிக்கும் கலைஞர்களின் அர்ப்பணிப்பான காட்சிகள் குறித்தும் சிலாகித்துப் பேசி, அப்போதைய ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், அழைப்பின் பேரில் காண வந்த காருகுறிச்சி அருணாசலத்தை, ஜனாதிபதியே நேரில் வந்து வரவேற்ற நெகிழ்ச்சியான நிகழ்ச்சி குறித்து மேடையில் பெருமிதம் தெரிவித்தார். பின்னர் பேசுகையில், வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ளும் நான் 19 ம் தேதி காருகுறிச்சி அருணாசலத் திற்கான மணிமண்டப கோரிக்கை குறித்து பேசுவேன் என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில், நெல்லை மாவட்டம் காருகுறிச்சியில் வாழ்ந்து மறைந்த நாதஸ்வர சக்கரவர்த்தி காருக்குறிச்சி அருணாச்சலம் அவர்களுக்கு நூற்றாண்டு விழா அரசு எடுத்துக் கொண்டாட வேண்டும். நலிந்த தவில், நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்து வைப்பேன்” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்தி: சென்னை: பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் நபர் கைது: 86 சவரன் நகை பறிமுதல்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM