கொரோனா பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறைத்துக் கொள்ள வேண்டாம் என்று, இந்தியப் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி, இந்தியாவின் குஜராத் மாநிலம் கதிலாவில் அமைந்திருக்கும் உமியா மாதா கோவில் நிறுவன தின விழாவில் காணொலி முலம் பிரதமர் மோடி உரையாற்றினார்.
கொரோனா தொற்று நாட்டை விட்டு முற்றிலும் நீங்கவில்லை, கொரோனா நெருக்கடி முடிந்து விட்டது என்று நாங்கள் கூறவில்லை. வடிவங்களை மாற்றி மீண்டும் அது பரவுகிறது. இதனால் பெருந்தொற்று நோய்க்கு எதிரான போரில் மக்கள் தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை குறைக்கக்கூடாது என்றும் பிரதமர் மோடி இதன் போது வலியுறுத்தினார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 185 கோடி டோஸ் தடுப்பூசிகள் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன, உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. பொதுமக்களின் ஆதரவுடன் இது சாத்தியமாகி உள்ளது.
ரசாயன உரங்களின் பாதிப்பில் இருந்து பூமித் தாயை காப்பாற்ற, இயற்கை விவசாயத்திற்கு விவசாயிகள் திரும்ப வேண்டும். கிராம அளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் இரத்த சோகை பாதிப்புள்ள பெண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் ஆரோக்கியமாக இருந்தால்தான், சமூகமும் நாடும் வலிமை பெறும்.
குஜராத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ஏரிகள் அமைக்கும் திட்டத்தை நாங்கள் செயல்படுத்துவோம். பருவமழைக்கு முன் ஏரிகளை ஆழப்படுத்துதல் மற்றும் நீர் வழித்தடங்களை சுத்தம் செய்து தண்ணீரை சேமிக்கும் வகையில் இது மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் மோடி மேலும் தெரிவித்துளார்.