கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்று சென்று கொண்டிருந்த ரயில் காலை 8.30 -க்கு ஈரோடு ரயில் நிலையத்தில் நின்றது. பின்னர் 8.50 -க்கு மீண்டும் ஈரோட்டிலிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்தில் ரயில் திடீரென நின்றது. உடனடியாக அங்கு பணியில் இருந்த காவல் துறையினர் ரயிலை நோக்கி சென்றனர்.
அப்போது பயணம் செய்து கொண்டிருந்த ஒரு பெண் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியது தெரியவந்தது.
இது குறித்து அந்த பெண்ணிடம் காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் விசாரித்தபோது, எனது மகள் ஈரோடு ரயில் நிலையத்தில் தின்பண்டம் வாங்க இறங்கி சென்றார். ஆனால் அவர் வருவதற்குள் ரயில் கிளம்பி விட்டதால் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினேன் என்றார்.
ரயில் நின்ற உடன் அவரது மகள் மற்றும் பயணிகள் ஏறினார்கள். பின்னர் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் முகவரி மற்றும் செல்போன் எண் போன்ற விவரங்களை வாங்கினார்கள். மேலும், அந்தப் பெண்ணுக்கு அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.