சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது சில தினங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்திய பயங்கரவாதியை பாதுகாப்புப் படையினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு – காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மைசுமா பகுதியில் கடந்த 4-ம் தேதி சிஆர்பிஎஃப் முகாம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர் படுகாயமடைந்தார். இதையடுத்து, தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.
இந்நிலையில், ஸ்ரீநகரின் பிஷெம்பர் நகரில் அந்த பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு இன்று ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல்துறையினர், சிஆர்பிஎப் வீரர்கள், ராணுவத்தினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீஸார் சரணடைந்து விடுமாறு தீவிரவாதிகளை அறிவுறுத்தினர். ஆனால், சரணடைய மறுத்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடந்த இந்த என்கவுன்ட்டர் சம்பவத்தில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மற்ற தீவிரவாதிகள் தப்பியோடி விட்டனர். அவர்களை தேடும் பணி தீவிரவமாக நடைபெற்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM