சென்னையின் பிரபலமான பிரியாணி உணவகங்களில் ஒன்றான புகாரி பிரியாணி கடையில், வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரை அடுத்து அந்த உணவகத்தை மூன்று நாட்கள் மூட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ள புகாரி உணவகத்திற்கு உணவு அருந்த வந்த ஒரு தம்பதியினருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் கரப்பாம்பூச்சி இருந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரி, உணவகத்தில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது சமையலறையில் விதிமுறைகள் எதுவும் பின்பற்றாமல் அசுத்தமான முறையில் உணவு சமைக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் உணவு தயாரிக்கும் இடத்தில் கரப்பான் பூச்சிகள் சுற்றித் திரிவதையும் அவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
தம்பதிகள் அளித்த புகாரின் அடிப்படையிலும், அவர் சோதனை மேற்கொண்டதில் அடிப்படையிலும் அந்த புகாரி உணவகத்தை மூன்று நாட்கள் மூட உத்தரவிட்டார். மேலும் அந்த உணவகத்திற்கு 5,000 ரூபாய் அபராதம் விதித்ததுடன், உணவகத்தில் உள்ள அனைத்து குறைகளையும் சரி செய்த பிறகு, அதிகாரிகளிடம் காண்பித்த பிறகு உணவகத்தைத் திறக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.