சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிஸ்புளோ சாப்ட்வேர் நிறுவனம், சிறப்பாக பணிபுரிந்த 5 ஊழியர்களுக்கு ரூ.1 கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளது.
கிஸ்புளோ சாப்ட்வேர் நிறுவனத்தின் 10-ம் ஆண்டு கொண்டாட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். இதில்தான் நீல நிற கார் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பணியாளர்கள் அனைவருக்குமே பிற்பகலில்தான் அவர்களுக்கு பரிசு வழங்கப்படும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் சிபிஓ-வாக பணிபுரியும் தினேஷ் வரதராஜன், பொருள் நிர்வாகப் பிரிவு இயக்குநர் கவுசிக்ராம் கிருஷ்ணசாமி, இயக்குநர் விவேக் மதுரை, இயக்குநர் ஆதி ராமநாதன், துணைத் தலைவர் பிரசன்னா ராஜேந்திரன் ஆகியோருக்கு கார்கள் பரிசாக வழங்கப்பட்டன. இது தங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியூட்டும் மகிழ்ச்சியான தருணம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுரேஷ் சம்பந்தன் கூறியதாவது:
கரோனா காலகட்டத்தில் நிறுவனம் மிகவும் கடுமையான சவால்களை எதிர்கொண்டது. பல பணியாளர்கள் வெளியேறினர். ஆனால் சில ஊழியர்கள் மட்டும் நிறுவனத்துக்கு பக்கபலமாக இருந்து சிறப்பாக செயல்பட்டனர். இதில் சிறப்பாக பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ 530 டி மாடல் கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இது மற்றவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிறுவனத்தில் பணியாளர்களுக்கு விடுமுறை கிடையாது. அவர்கள் விரும்பினால் வீட்டிலிருந்தே பணிபுரியலாம். விடுப்பு எடுக்க விரும்பினால் வீட்டிலிருந்தே தெரிவிக்கலாம். வருகை பதிவேடு முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.