சீனாவை விட இந்தியாவே அதிக உதவிகளை செய்கிறது: இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே

“சீனாவை விட இந்தியாவே இலங்கைக்கு அதிக உதவிகளை செய்து வருகிறது” என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு, தவறான பொருளாதார கொள்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் இலங்கை கடுமையாக பொருளாதார நெருக்கடியில் தற்போது சிக்கியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கூட விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலையும் பெரிய அளவிலான ஏற்றத்தை சந்தித்திருக்கிறது. இதனால் தங்களின் அன்றாட வாழ்க்கையை கழிப்பதற்கே இலங்கை மக்கள் ஆயிரக்கணக்கில் செலவிட வேண்டியுள்ளது. பண வசதி இல்லாத ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரோ சாப்பிட கூட வழி இல்லாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர்.
image
இது, அந்நாட்டு மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இதன் காரணமாக, லட்சக்கணக்கான பொதுமக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபட்சேவை பதவி விலக் கோரி எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், கோட்டாபய ராஜபட்சே பதவி விலக மறுத்து வருகிறார்.
இந்நிலையில், இலங்கையின் பொருளாதார சூழல் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இன்று பேட்டி அளித்தார்.
image
அவர் கூறுகையில், “பொருளாதார நிலைமையை தவறாக கையாண்டதன் காரணமாகவே இலங்கை இப்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க கோட்டாபய ராஜபட்சே அரசின் நிர்வாகத் தோல்வி தான் காரணம். இந்த பொருளாதார நெருக்கடி இலங்கையை பேரிடர் சூழலில் தள்ளிவிட்டிருக்கிறது. இதனால் அரசியல் ரீதியிலும் பிரச்னை எழுந்துள்ளது.
உணவுப்பொருட்கள் வாங்க பொதுமக்கள் நீண்டவரிசைகளில் காத்திருக்கின்றனர். இதுபோன்ற அவல நிலை எந்த நாட்டிற்கும் வரக்கூடாது. தற்போது இலங்கைக்கு இந்தியா தான் அதிகபட்ச உதவிகளை செய்து வருகிறது. இதற்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சீனாவிடம் இருந்து எந்த முதலீடும் இந்தியாவுக்கு கிடைக்கவில்லை” என ரணில் விக்கிரமசிங்கே கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.