சென்னை புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (43). இவர் வீட்டில் 6 நாய்களை வளர்த்து வருகிறார். கடந்த 7-ம் தேதி மதியம் ராஜலட்சுமியின் எதிர்வீட்டில் குடியிருக்கும் தனசேகர் என்பவர் `உங்கள் நாய் அடிக்கடி என்னைப் பார்த்து குரைக்கிறது’ என்று அவரிடம் தகராறு செய்துள்ளார். மேலும் அந்த நாயை டியூப் லைட்டால் தாக்கியுள்ளார். அதை ராஜலட்சுமியின் மகன்கள் திவாகர், ரித்திஷ் ஆகியோர் தட்டிக் கேட்டிருக்கின்றனர்.
உடனே ஆத்திரமடைந்த தனசேகர், வீட்டிலிருந்து கத்தியை எடுத்து வந்து அவர்களைக் குத்தியுள்ளார். அப்போது அதைத் தடுக்க முயன்ற ராஜலட்சுமிக்கும் கத்திக்குத்து விழுந்துள்ளது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்துள்ளனர். அதைப் பார்த்த தனசேகர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ரத்தக்காயங்களுடன் இருந்த ராஜலட்சுமி, அவரின் மகன்களை போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து ராஜலட்சுமி, புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வானுவாமலை கொலை முயற்சி உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணைக்குப் பிறகு தனசேகரை (32) போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து கத்தியையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
நாய்களுக்காக கத்திக்குத்து காயமடைந்த ராஜலட்சுமி, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “எங்கள் தெருவில் குடியிருக்கும் தனசேகர் என்பவர், அவரின் பெற்றோரை பார்ப்பதற்காக 7-ம் தேதி காலை 10 மணியளவில் வந்தார். அப்போது என்னுடைய வீட்டிலிருந்த நாய்கள் குரைத்துள்ளன. அதனால் ஆத்திரமடைந்த தனசேகர், ஒரு டியூப் லைட்டைஎடுத்து வந்து வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து நாய்களை அடித்துள்ளார். நாய்கள் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டதையடுத்து என்னுடைய மகன்கள் வந்துள்ளனர். மூத்த மகன் திவாகர், நாய்களை அடிப்பதை தட்டிக் கேட்டதோடு அதை தடுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த தனசேகர், கத்தியை எடுத்துக் கொண்டுவந்து திவாகரின் இடது கையில் வெட்டியுள்ளார். அதைத் தடுக்க வந்த இளைய மகன் நீத்திஷின் முன்பக்க தலையிலும் தனசேகர் வெட்டியுள்ளான். இருவரின் சத்தம் கேட்டு நான் வெளியில் ஓடி வந்து தனசேகரை தடுத்த போது அவர் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு என்னுடைய தலையில் வெட்டினான். அதனால் எக்கு வலது கை, இடது கை, தலை ஆகியவற்றில் வெட்டு காயம் ஏற்பட்டது. அப்போது தனசேகரின் மனைவி ஓடி வந்து அவரை தடுத்தார். ஆனாலும் தனசேகர் என்னைப்பார்த்து உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என்று கத்தியை வீசினான். என்னையும் என் மகன்களையும் கத்தியால் வெட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய தனசேகர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.