லக்னோ: லக்னோவில் திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஜான்வி கபூருடன் பலர் செல்பி எடுக்க முயன்றதால், விழாவை பாதியில் முடித்துக் கொண்டு அவர் கிளம்பினார். கீழே விழுந்ததில் பலருக்கு லேசான உள்காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவின் ஷாஹீத் பாதையில் புதியதாக அமைக்கப்பட்ட பல்பொருள் அங்காடியை (மால்) திறந்து வைப்பதற்காக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் அழைக்கப்பட்டிருந்தார். குறிபிட்ட ஷோரூமைத் ஜான்வி கபூர் திறந்துவைத்த போது, அவருடன் செல்பி எடுக்க நூற்றுக் கணக்கானனோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் ஜான்வி கபூரின் பாதுகாவலர்களாக 20 பேர் சுற்றிவளைத்து நின்றதால், நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் நெருக்கடியில் சிக்கினர். ஒருகட்டத்தில் நிகழ்ச்சியை பாதியிலேயே முடித்துக் கொண்டு ஜான்வி கிளம்பினார். தகவலறிந்த போலீசார், அந்த மாலுக்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுகுறித்து திறப்பு விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர் ஒருவர் கூறுகையில், ‘திறப்பு விழாவில் பங்கேற்க நானும் அழைக்கப்பட்டேன். மற்றவர்களை போன்ற நானும் ஜான்வியை சந்திக்க ஆர்வமாக இருந்தேன். அவர் இரவு 8.30 மணிக்கு வரவேண்டும்; ஆனால் அவள் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தார். அதற்குள் நடிகை மாலுக்கு வரும் தகவல் வேகமாக பரவியது. அதனால், பெருங் கூட்டம் கூடியது. ஜான்வி வந்தவுடன் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. எங்களில் சிலர் கீழே தள்ளப்பட்டோம்; மேலும் சிலர் கீழே விழுந்தனர். ஒரு பெண் கீழே விழுந்ததில், அவரது தலையில் அடிபட்டது. பலர் கீழே விழுந்ததால், அவர்களுக்கு காயம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது’ என்றார். இதுகுறித்து மாலின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘நடிகையுடன் நிறைய பாதுகாவலர்கள் வந்தனர். சிறப்பு விருந்தினர்களும் இருந்தனர். பிரபல ஒருவர் வருகையில் இதுபோன்று நடப்பது சகஜம். செல்பி எடுப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை. ஜான்வி வர தாமதமானதால் கூட்டம் அதிகமானது’ என்றார்.