புதுடெல்லி: டெல்லி மெஹரோலி பகுதியில் வரலாற்று சுற்றுலா தலமாக உள்ளது குதுப்மினார். இது, டெல்லி சுல்தான் வம்சத்தின் முதல் மன்னர் குத்புதீன் ஐபக்கால் 1198-ல் கட்ட தொடங்கப்பட்டது. அதற்கு முன்னர் அங்கு ராஜா பிருத்விராஜ் சவுகானால் கட்டப்பட்ட கோயில்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்திய தொல்பொருள் ஆய்வக நிர்வாகத்தின் கீழ் குதுப்மினார் உள்ளது. அதன் நுழைவு வாயிலில் ‘குவ்வத்தூல் இஸ்லாம் (இஸ்லாத்தின் சக்தி)’ எனும் பெயரிலான மசூதி அமைந்துள்ளது.
இந்த மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை செய்து வருகின்றனர். இந்நிலையில், 27 இந்து கோயில்களை இடித்து மசூதி கட்டப்பட்டதாக இந்து அமைப்பினர் பல ஆண்டுகளாகப் புகார் கூறி வருகின்றனர். தற்போது மெஹரோலி நகராட்சி வார்டு பாஜக உறுப்பினர் ஆர்த்தி சிங் மத்திய அரசிடம் நேற்று ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
அதில், ‘‘குதுப்மினாருக்குள் இந்து கடவுள் சிலைகளை அவமதிக்கும் வகையில் தரைகளில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மாற்றி உகந்த இடத்தில் வைத்து, பூஜை வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். கடந்த 2000-ம் ஆண்டு வரையில் இதனுள் சுற்றுலா பயணிகள் பூஜைகள் செய்து வந்தனர். அதன் பிறகு ஏதோ சிலகாரணங்களால் தடை விதிக்கப்பட் டுள்ளது. அந்த தடையை நீக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளார்.
இதே விவகாரத்தை, தேசிய தொல்பொருள் ஆணையத்தின் தலைவர் தருண் விஜய்யும், கடந்த மார்ச் 25-ல் எழுப்பினார். இந்திய தொல்பொருள் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரலுக்கு அவர் எழுதியக் கடிதத்தில், ‘‘குதுப்மினாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் தம் காலணிகளை விடும் இடத்தில், இந்து கடவுள்களை அவமதிக்கும் வகைகள் நாக தேவதை, விநாயகர் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றை தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாத்து வைக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.
கடந்த டிசம்பர் 2020-ல், இந்து மடத்தின் தீர்த்தங்கர் ரிஷப் தேவ் துறவி, டெல்லி சிவில் நீதிமன்றத்தில் குதுப்மினார் தொடர்பாக மனு ஒன்று தாக்கல் செய்தார். அந்த வழக்கை மத்திய அரசின் 1991-ம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை சுட்டிக் காட்டி நீதிபதி நேஹா சர்மா தள்ளுபடி செய்தார்.
இந்தச் சட்டம், சுதந்திரத்துக்கு முன்பிருந்து நடைபெற்ற அயோத்தி பாபர் மசூதி, ராமர் கோயில் தொடர்பான வழக்குகளால், முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.
இதன்படி, நாடு முழுவதிலும் உள்ள மத வழிப்பாட்டுத் தலங்கள் சுதந்திரத்துக்கு பிறகு இருந்த நிலை தொடரும். எனவும் அதில் மாற்றங்கள் செய்யவோ, பிற மதத்தினர் உரிமை கோரவோ முடியாது என்று வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் துறவி ரிஷப் தேவ், டெல்லி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு வரும் மே11-ல் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்க்கப்படுகிறது.
இதுபோல், இந்து அமைப்புகள் குதுப்மினாரில் உரிமையை கோருவது முதல் முறையல்ல. இதற்கு முன்பு நவம்பர் 14, 2000-ம் ஆண்டில் விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் குதுப்மினாரை புனிதப்படுத்த யாகம் நடத்துவதாக அறிவித்தனர்.
அப்போது அனுமதியின்றி யாகம் நடத்த முயன்றதாக 80 பேர் கைது செய்யப்பட்டு யாகத்துக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.