சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேடுக்கு சுழற்சி காரணமாக, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று (ஏப்.10) மிக கனமழை பெய்யக்கூடும்.
நாளை (ஏப்.11) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கூடலூரில் 10 செ.மீ மழையும், வைகை அணை மற்றும் மீமிசலில் தலா 6 செ.மீ மழையும், குறிஞ்சிப்பாடி, பெரியகுளத்தில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.