தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நீதிமன்ற உத்தரவுகளை முறையாக தேர்தல் ஆணையம் அமல்படுத்தவில்லை என்று, மாநில தேர்தல் ஆணையம் மீதும், தமிழக உள்துறை செயலர், டிஜிபிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலரும், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தலுக்கு முன்பு வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்படும் என்றும், உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படும் என்றும் தமிழக அரசு தரப்பில் இருந்தும், மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்தும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் நடத்தவில்லை என்று சென்னை அரும்பாக்கத்தில் சேர்ந்த தேவராஜ் என்பவர், மூன்றாம் நபராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
அவரின் அந்த மனுவில் வாக்கு எந்திரங்கள், வாக்குச்சீட்டுகளை சேதப்படுத்தி உள்ளதாகவும், தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளனர் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முறையாக அமல்படுத்த தவறிய மாநில தேர்தல் ஆணைய செயலர் சுந்தரவல்லி, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலர் எஸ் கே பிரபாகர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.