தமிழகம் முழுவதும் நடந்த குருத்தோலை ஞாயிறு பவனி: கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (ஏப்.10) ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலை பவனி நடைபெற்றது.

கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர். ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். ஜெருசேலம் நகரில் கோவேறு கழுதையில் பவனியாக வந்த இயேசு கிறிஸ்துவரை அங்கிருந்த மக்கள் குருத்தோலைகளுடன் வரவேற்று, “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியதை நினைவுகூறும் வகையில் இந்த குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.

அந்த நாளை நினைவுகூறும் வகையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

முன்னதாக, கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கியப் பகுதிகளின் வழியாக ஓசன்னா கீதங்களை பாடியபடி, பவனியாக வந்தனர். பின்னர் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றது.

கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைப்பிடிக்கும் இறுதி வாரமான இன்று குருத்தோலை ஞாயிறும், வரும் ஏப்ரல் 14-ம் தேதி புனித வியாழனும், ஏப்ரல் 15-ம் தேதி புனித வெள்ளியும் கடைபிடிக்கப்படும். ஏப்ரல் 17-ம் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.