சென்னை தி.நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் ஈழத் தமிழர் விரும்பும் தீர்ப்பு – விளக்க மாநாடு நேற்று (9.4.2022) நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஈழத்தமிழருக்கான தீர்மானம் இயற்றப்பட்டது.
மாநாட்டில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் (வி.சி.க) பேசுகையில், “ஈழத் தமிழர் விடுதலை குறித்துப் பேசுவது வெறும் அரசியல் லாபத்திற்காக மட்டும் இல்லை. ஈழத் தமிழர் அரசியல் பேசுவதால் இங்கு ஓட்டு அதிகமாக விழப்போவதில்லை, சொல்லப்போனால் குறையத்தான் செய்யும். ஈழத் தமிழர் விடுதலை பேசுவது, சிங்கள பௌத்த பேரினவாத அரசியலுக்கு எதிரானது. இந்தியாவில் இந்துத்துவா அடிப்படையில் பா.ஜ.க சிறுபான்மையினரை எப்படி ஒடுக்குகிறதோ, அதுபோல இலங்கையில் சிங்களர்கள் மதவாத இனவாத அடிப்படையில் தமிழர்களை ஒடுக்குகிறார்கள். காங்கிரஸும், பா.ஜ.க-வும் தமிழர்களுக்குத் துணை நிற்காமல் சிங்கள பேரினவாதத்திற்குத் துணை நிற்கின்றன. ஒருவேளை தமிழர்கள் இந்து சிறுபான்மையினர் என்று அடையாளப்படுத்தப்பட்டிருந்தால் பா.ஜ.க அவர்களுக்குத் துணை நின்று இருக்கக்கூடும்.
ஈழத் தமிழர்களுக்கான விடுதலையும், நீதியும் பெறுவதற்கு இந்திய அரசின் உதவி தேவைப்படுகிறது. ஒன்றிய அரசின் துணையுடன் சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெற்று ஐ.நா-வில் பேசினால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும்” என்றார்.
அவரைத் தொடர்ந்து பழ நெடுமாறன்( உலகத் தமிழர் பேரமைப்பு) பேசுகையில், “மலேசியா தென்னாப்பிரிக்கா நாடு என அனைத்து உலக நாடுகளிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.
எங்குள்ள தமிழர்களுக்குப் பிரச்னை என்றாலும் அவர்களுக்குக் குரல் கொடுப்பது தாய்நாட்டுத் தமிழர்களின் மகத்தான கடமை. ஈழத்தமிழர் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை, காவிரி பிரச்னை ஆகியவை வெறும் தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கான பிரச்னை அல்ல; ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்னை. தமிழர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் மட்டுமே தமிழர்களின் தலையாய பிரச்னையில் வெற்றியடைய முடியும்” என்றார்.
மே 17 இயக்கம் திருமுருகன் காந்தி பேசுகையில், “இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பெருமளவு தூரமில்லை, இருப்பினும் போர்க்காலங்களில் கப்பல் அனுப்பி நம் தமிழ் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை. ஸ்டெர்லைட் போராட்டத்தில் கூட இதே நிலைமைதான். தமிழருக்கான அரசியல் கூட பேச முடியாமல் தமிழினம் அடிமையாக இருக்கிறது. இந்திய ஒன்றிய அரசின் இலங்கைக்கான வெளியுறவுக் கொள்கையில் தமிழ்நாடு தலையிடும் போதுதான் ஈழத் தமிழர் விடுதலை கிட்டும்” என்றார்.
இந்த மாநாட்டில் வைகோ (பொதுச்செயலாளர், ம.தி.மு.க), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), கே.எஸ் ராதாகிருஷ்ணன் (திமுக), தியாகு (தமிழ்தேசிய விடுதலை இயக்கம்) , கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்) உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.