திருச்செந்தூர்:
முதல்-அமைச்சர் உத்தரவுபடி தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு தரமான திருநீறு, குங்குமம் பிரசாதம் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
அதன்படி ரூ. 3 கோடி செலவில் பழனி பால தண்டாயுதபாணி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளிட்ட 4 கோவில்களில் திருநீறு தயாரிக்கப்படுகிறது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 4 கோவில்களில் குங்குமம் தயாரிக்கப்படுகிறது. இந்தக் கோவில்களில் தயாரிக்கப்படும் திருநீறு, குங்குமம் பிரசாதங்கள் மற்ற கோவில்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் திருநீறு தயாரிக்கும் திட்டத்தை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தயாரிக்கப்பட்ட திருநீறு கோவில் கலை அரங்கத்தில் வைத்து இணை ஆணையர் குமரதுரை, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், செட்டியாபத்து சிதம்பரேஸ்வரர் கோவில், தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில்களுக்கு வழங்கினார். பின்னர் திருநீறு தயாரிக்கும் கூடத்தை மண்டல இணை ஆணையர் அன்புமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் கோவில் உதவி ஆணையர் வெங்கடேஷ், தக்கார் பிரதிநிதி பாலசுப்பிரமணிய ஆதித்தன், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், செட்டியாபத்து சிதம்பரேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் பாலமுருகன், கற்குவேல் அய்யனார் கோவில் செயல் அலுவலர் காந்திமதி, பழனி ஆதிமூல விபூதி சித்தர் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்…பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்- நாளை தேர்வாகிறார்