திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரெயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது.
தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற 12-ந்தேதி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நேற்று மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
12-ந்தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். 12-ந்தேதி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 13-ந்தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்திருந்தது.
ஆனால் தேவஸ்தான அறிவிப்பு தெரியாமல் ஏராளமான பக்தர்கள் இலவச தரிசன டிக்கெட் கவுண்டருக்கு சென்றனர். ஆனால் அங்கு கவுண்டர் மூடப்பட்டிருந்ததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர்.