திருப்பூர் மாநகரில் விற்பனையாகும் நம்பர் லாட்டரி மற்றும் கேரள லாட்டரி விற்பனையால், தொழிலாளர்கள் சீரழிந்து வருவதாக பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: திருப்பூர் மாநகரில் இயங்கி வரும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களிடம், நம்பர் லாட்டரி விற்பனையை பலர் சத்தமின்றி செய்கின்றனர். அதிர்ஷ்டத்தை நம்பி லாட்டரி வலையில் விழும் தொழிலாளர்கள் மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தினரும் பொருளாதார சிக்கலில் சிக்குகின்றனர். லாட்டரியின் எண்களை மட்டும் முகவர்கள் எழுதிக்கொண்டு, லட்சக்கணக்கான ரூபாய் பரிசாக விழும் என தொழிலாளர்களுக்கு பரிசு ஆசை காட்டி, அவர்களது வலையில் வீழ்த்துகின்றனர். ஒருவருக்கு ஒருமுறை பரிசு விழுந்துவிட்டால், அவரை லாட்டரி வாங்கும் பழக்கத்தில் இருந்து விடுபடவைப்பது எளிதான காரியம் இல்லை. நம்பர் லாட்டரிக்கு ஒரு டோக்கன் ரூ.30 முதல் ரூ. 50 வரை எழுதுகின்றனர். பணத்தாசையாலும், ஏதாவது ஒருவழியில் தனக்கு பணம் கிடைத்து குடும்ப கஷ்டம் தீர்ந்துவிடாதா என்ற ஏக்கத்திலும், நாளொன்றுக்கு ரூ. 300 முதல் ரூ.1,000 வரை லாட்டரி எண் எழுதி வாங்கும் தொழிலாளர்களும் உண்டு.
கேரள மாநிலத்தில் குறிப்பிட்ட லாட்டரி எண்ணுக்கு பரிசு விழுந்தால், அந்த எண்ணைக் கொண்டு இங்கும் பரிசும் தருகின்றனர். 3 எண்ணுக்கு அதிக பரிசும், 2 எண்ணுக்கு அடுத்த பரிசும், ஓர் எண்ணுக்கு குறைந்தபட்ச பரிசும் கிடைக்கின்றன. கேரள லாட்டரி முடிவுகளை இணையத்தில் தெரிந்துகொள்கின்றனர். கேரள மாநிலத்தில் இருந்து நாள்தோறும் தொழில் தேவைக்காக சென்றுவரும் பலர், லாட்டரியை மொத்தமாக வாங்கி வந்து திருப்பூரில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யும் போக்கும் சமீபநாட்களாக அதிகரித்துள்ளது. லாட்டரி விற்பனையால் ஏற்படும் சீரழிவு குறித்து தொழிலாளர்களிடையே, அந்தந்த நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் லாட்டரி விற்பனை குறித்து கண்காணித்து, திருப்பூர் மாநகர காவல் நிலையத்தில் புகார் தர நிறுவன உரிமையாளர்களும், பின்னலாடை உரிமையாளர்களும் முன்வரவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘திருப்பூர் மாநகரில் நம்பர் லாட்டரி, கேரள லாட்டரி விற்பனை குறித்து புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். புகார்தாரர்களின் ரகசியம் காக்கப்படும்,’’ என்றனர்.