சென்னை:
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தமிழக – வட இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும் தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது:-
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும். தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 12, 13, 14 தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வத்திராயிருப்பு (விருதுநகர்) 12 செ.மீ., கூடலூர் (தேனி) 10, பேரையூர் (மதுரை), மீமிசல், (புதுக்கோட்டை), வைகை அணை தலா 6 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.