நாட்டின் எல்லையைக் காப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நினைவு கூர்ந்துள்ளார்.
பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நாதேஸ்வரி கோவிலில் அமித் ஷா, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் உள்ளிட்டோர் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
பாகிஸ்தான் எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையின் காவல் சாவடியை அமித் ஷா தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, நாடு பாதுகாப்பாக இருந்தால்தான் முன்னேற்றம் அடையும் என்றும், உலக அரங்கில் அதன் மதிப்பு உயரும் என்றும் தெரிவித்தார்.
எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டெரிக்கும் பாலைவனத்திலும் நின்று நாட்டைக் காப்பதாகத் தெரிவித்தார். நாட்டுக்கு ஒரு சிக்கல் எழும்போது துணிச்சலைக் காட்டுவதில் எல்லைப் பாதுகாப்புப் படை ஒருபோதும் பின்வாங்கியதில்லை என்றும், அவர்கள் வீரதீரப் பதக்கங்களைப் பெற்றுள்ளதுடன் எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.