இந்தியாவின் முதல் கடல் காற்றாலை நிலையம் தனுஷ்கோடியில் ரூ.350 கோடி செலவில் அமைய உள்ளதாக தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் கே.பலராமன் கண்ணன் தெரிவித்துள்ளார்.
கதிர்வீச்சு அபாயம் காரணமாக அணு மின் நிலையங்களின் உற்பத்தியை குறைத்து, சுற்றுச்சூழலை பாதிக்காத காற்றாலை, சூரிய சக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு பல்வேறு நாடுகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.
நிலப்பரப்பை விட கடல் மட்டத்துக்கு மேலே காற்று வேகமாக வீசும். எனவே, கடலில் காற்றாலை நிறுவினால் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். டென்மார்க் கடல் பகுதியில் 1991-ல் முதன் முதலில் காற்றாலை பண்ணை அமைக்கப்பட்டது. தொடர்ந்து பிரிட்டன், ஜெர்மனி, பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்வீடன், அயர்லாந்து, ஸ்பெயின், நார்வே உள்ளிட்ட நாடுகளும் கடலில் காற்றாலைகளை அமைத்துள்ளன.
இந்தியாவில் கடலில் காற்றாலை அமைத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடர்பாக மத்திய அரசு 2015-ல் அறிவிப்பு வெளியிட்டது.
மத்திய எரிசக்தித் துறை சார்பில் நாட்டின் 7,600 கிலோ மீட்டர் நீள கடற்கரை பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காற்று வீச்சு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 29 கி.மீ. வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 24.5 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுவது தெரிய வந்தது.
இதையடுத்து ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் அதி நவீன கருவி பொருத்தப்பட்ட உயர் கோபுரம் அமைக்கப்பட்டு காற்றின் வேகம் குறித்த ஆய்வு கடந்த 5 ஆண்டுகளாக நடந்தது. இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன.
இது குறித்து தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனத்தின் இயக்குநர் கே.பலராமன் கண்ணன் கூறியதாவது: தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (என்ஐடபிள்யூஇ) சார்பில் தனுஷ்கோடி கடலில் ரூ.350 கோடி செலவில் காற்றாலை நிலையத்தை அமைக்க உள்ளோம். இதன் மூலம் 8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். விரைவில் காற்றாலைக்கான இயந்திரங்களை வாங்குவதற்கான டெண்டர் விடப்பட உள்ளது என்று கூறினார்.