பழநி முருகன் கோயில்: `2-வது புதிய ரோப் கார்'; விரைவில் கும்பாபிஷேகம்; – அமைச்சர் சேகர்பாபு தகவல்!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான மங்களப்பபுள்ளி லெட்சுமி நரசிங்க பெருமாள் கோவில், தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவில்கள் உள்ளன. இந்த 2 கோயில்களிலும் கும்பாபிஷேகம் செய்து 12 ஆண்டுகளாகிறது. தற்போது இந்தக் கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வது மற்றும் பராமரிப்பு பணிகள் செய்வது தொடர்பாகவும், பழனி முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கும்பாபிஷேகப் பணிகளையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், இந்து சமய அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

சேகர்பாபு

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “தமிழகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு மேலான கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கும் பராமரிப்புப் பணிகள் செய்வதற்கு என 100 கோடி ரூபாய் நிதி நடப்பு நிதி ஆண்டில் தமிழக முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார். அறநிலையத்துறைக்குச் சொந்தமான நிலங்கள் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் வரையறுக்கப்பட்டு அத்துமால் கல் போடப்பட்டுள்ளது . தமிழகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான பல நூற்றாண்டுகள் பழைமையான கோயில்களில் பதிவேடுகள் 4 கோடி பக்கங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. பழனியில் 2 ஆண்டுகளுக்குள் புதிதாக இரண்டாவது புதிய ரோப் கார் திட்டம் செயல்படுத்தப்படும்.

வழிபாடு

திமுக ஆட்சிக்கு வந்து 10 மாத காலங்களில் ரூ 2,500 கோடி மதிப்புள்ள அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில் நிலங்களை மீட்டு தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. தமிழக கோயில்களில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்திச் செல்லப்பட்ட சாமி சிலைகள் இதுவரை 872 சிலைகள் மீட்கப்பட்டு உள்ளது . மேலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 4 சிலைகள் டெல்லியில் வைக்கப்பட்டு உள்ளது. இதனை விரைவில் தமிழகம் கொண்டு வரப்படவுள்ளது மீட்கப்பட்ட சிலைகள் அனைத்தையும் எப்படி பாதுகாப்பது என்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார்.

ஆய்வு

திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்து சமய அறநிலைத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் அன்னைத் தமிழில் அர்ச்சனை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் பல கோயில்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும். தமிழகத்தில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்கள் தனியாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. `இறை சொத்து இறைவனுக்கே’ என்ற அடிப்படையில் அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்கள் அனைவருக்கும் சமம் தனியார் கட்டுப்பாட்டில் செயல்பட அனுமதிக்கமுடியாது.

செய்தியாளர் சந்திப்பு

இரண்டு மாதங்களில் கும்பாபிஷேகப் பணிகள் நிறைவடைய வாய்ப்புள்ளது. கும்பாபிஷேகம் நடைபெறக்கூடிய தேதி பின்னர் அறிவிக்கப்படும். கும்பாபிஷேகத்திற்காக மூலவர் சிலைக்கு மருந்து சாத்துதல் பணியை மேற்கொள்ள வேண்டுமென அர்ச்சகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அந்தப் பணிகள் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். பழனி முருகன் கோயிலுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள வழிகாட்டிதலின்படி விரைவில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யக்கூடிய பணி விரைவில் மேற்கொள்ளப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.