இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவில் நடைபெற்றது. 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி நாடாளுமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி, “பழைய பாகிஸ்தானை மீண்டும் வரவேற்கிறோம். பாகிஸ்தானில் உள்ள ஒவ்வொருவரையும் வாழ்த்த விரும்புகிறேன். பாகிஸ்தான் இளைஞர்கள் தங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாதீர்கள், முடியாதது எதுவுமில்லை” என்று தெரிவித்தார்.
பாகிஸ்தானின் முதல் பெண் பிரதமரான பெனாசிர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ, பாகிஸ்தானின் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அவர் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.