பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தோல்வியடைந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலுக்கு பிறகு வலிமையற்ற கூட்டணி உருவாக்கப்பட்டு இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து அவரை பிரதமர் பதவியை விட்டு விலக வைத்துள்ளனர்.
இம்ரான்கான் பதவி விலகுவதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த மூன்று தலைவர்கள் மிக முக்கிய பங்காற்றியுள்ளனர்.
ஷாபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தான் பிரதமராக மூன்று முறை பதவி வகித்த நவாப் ஷெரீஃப்புக்கு தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகிறார். இம்ரான் கான் தற்போது பதவி விலகிய நிலையில் இவரது சகோதரரான ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராக அதிக வாய்ப்பு உள்ளது. 70 வயதான ஷாபாஸ் ஷெரீஃப், பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். தற்போது பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக உள்ளார்.
ஆசிப் அலி சர்தாரி
சிந்து மாகாணத்தின் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஆசிப் அலி சர்தாரி, பெனாசிர் பூட்டோ பிரதமராக வருவதற்கு முன்பு அவரை திருமணம் செய்துகொண்டார். அரசியலில் குதித்த பிறகு, அரசு ஒப்பந்தத்தில் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஊழல், போதை பொருள் கடத்தல், கொலை ஆகிய பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இரண்டு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட பிறகு, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிஎம்எல்-என் கட்சியுடன் கூட்டணி அமைத்து, ஓராண்டு காலம் அதிபராக பொறுப்பு வகித்தார்.
பிலாவல் பூட்டோ சர்தாரி
ஆசிப் அலி சர்தாரி-பெனாசிர் பூட்டோ தம்பதியின் மகனான பிலாவல் பூட்டோ சர்தாரி, தனது தாயின் படுகொலைக்கு பிறகு 19 வயதிலேயே பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.