லக்னோ:
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்ததாகவும், அவரே முதலமைச்சராக இருக்குமாறும் தெரிவித்த போதும் மாயாவதி எங்களுடன் பேசவே இல்லை என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.
இதனால் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வர பகுஜன் சமாஜ் பாதை வகுத்து கொடுத்தது என்றும் ராகுல் குற்றம் சாட்டியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள மாயாவதி, தமது சொந்தக் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை தீர்க்க முடியாத ராகுல்காந்தி, பகுஜன் சமாஜ் குறித்து குறை சொல்வதாக கூறியுள்ளார்.
இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் காங்கிரஸ் 100 முறை யோசிக்க வேண்டும் என்றும், அவர்களால் பாஜகவை வெல்ல முடியவில்லை என்றும் மாயாவதி கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதும் , இல்லாத போதும் மாநிலத்திற்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி கூட தனது பகுஜன் சமாஜ் கட்சியை அவதூறாகப் பேச முயன்றதாகவும், இப்போது பிரியங்கா காந்தி கூட மத்திய அமலாக்கத்துறை மற்றும் பிற புலனாய்வு அமைப்புகளுக்கு நான் பயப்படுகிறேன் என்று கூறி அதையே செய்கிறார் என்றும் மாயாவதி தெரிவித்தார்.
இதில் உண்மை எதுவும் இல்லை என்றும், இது போன்ற அற்ப விஷயங்களை பேசுவதை விட உத்தரப் பிரதேச தேர்தல் தோல்வியில் இருந்த மீளவது குறித்து இப்போது கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதையும் படியுங்கள்…
ஆந்திராவில் புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு- நடிகை ரோஜா அமைச்சராகிறார்