பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை, சொத்து வரி உயர்வு மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை, சொத்து வரிஉயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதை கண்டித்தும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை, புதுச்சேரி, மாவட்டத் தலைநகரங்களில்ஏப்.9-ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிவித்தார்.
அதன்படி, சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் துணைத் தலைவர் மவுரியா தலைமை தாங்கினார். அப்போது, அவர் கூறியதாவது:
கரோனா தொற்றால் கடந்த2 ஆண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் அவதிப்படுகின்றனர். இந்த சூழலில் விலைவாசி உயர்வு மக்களை மேலும் வாட்டி வதைக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சொத்து வரி மட்டுமின்றி, சுங்கக் கட்டணம், மருந்துகள், கட்டுமானப் பொருட்கள், நூல், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால்தான் விலை உயர்வுக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம். விலைவாசியை குறைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.