சமீபகாலங்களில் இந்தியாவில் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரம் மற்றும் மருந்து பொருள்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்து காணப்படுவதால் ஏழை, எளிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், டெல்லி – கவுகாத்தி விமானத்தில் இருந்து இறங்கும்போது காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் வழிமறித்து கேள்வி எழுப்பியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் மகளிர் அணியின் தலைவி நெட்டா டிசோசா இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “அமைச்சர் ஸ்மிருதி இரானியிடம் காஸ், எரிபொருள் விலைவாசி உயர்வு குறித்து கேட்டபோது, அவர் தடுப்பூசிகள் ரேஷன் பொருள்கள் மற்றும் ஏழைகளின் மீது குற்றம்சாட்டுகிறார். இந்த வீடியோவில் அவர் எப்படி பதில் அளிக்கிறார் என்பதை சற்று பாருங்கள்’’ எனப் பதிவிட்டிருக்கிறார்.
காங்கிரஸ் மகளிரணி தலைவி சமையல் காஸ் தட்டுப்பாடு குறித்து கேட்டதற்கு அவரின் மொபைல் போனை பார்த்தபடியே, `தயவு செய்து பொய் சொல்லாதீர்கள்’ என அமைச்சர் அந்த வீடியோவில் கூறுகிறார். மேலும் காங்கிரஸ் உறுப்பினர் எழுப்பிய எந்த கேள்விக்கும் அமைச்சர் சரியாக பதில் அளிக்காமல் அங்கிருந்து நகர்ந்து செல்ல முனைப்பு காட்டியதை வீடியோவில் பார்க்கமுடிகிறது.
பெட்ரோல் விலை கடந்த 16 நாள்களில் 14 முறை உயர்த்தப்பட்டு, லிட்டருக்கு ரூ.10 அதிகரித்திருக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக மட்டுமே விலை உயர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.