’மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட 60 லட்சம் பேரில் 24.03 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தமும், 16.50 லட்சம் பேருக்கு நீரிழிவு நோயும் இருப்பது தெரியவந்ததாக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்த பின்புஅவர் பேசியதாவது: தமிழகத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தில் இதுவரை சுமார் 60 லட்சம் பேரை பரிசோதித்துள்ளோம். அவர்களில் 24.03 லட்சம் பேருக்கு உயர் ரத்த அழுத்தம், 16.50 லட்சம் பேருக்கு நீரிழிவு நோய்கள் உள்ளன. 12.10 லட்சம் பேருக்கு இவை இரண்டும் உள்ளன என்பது தெரியவந்துள்ளது. பலர் தங்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் இருப்பது தெரியாமலேயே உள்ளனர். இதனால் அவர்களுக்கு சிறுநீரகப் பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் எளிதில் ஏற்படுகின்றன. எனவே, இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 6,644 பேரும், கல்லீரலுக்கு 314 பேரும், இதயத்துக்கு 40 பேரும், நுரையீரலுக்கு 28 பேரும், கணையத்துக்கு 2 பேரும் பதிவு செய்து காத்திருக்கின்றனர். கரோனாவுக்குப் பிறகு, உடல்தான கொடையாளர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது முதியவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் 18 முதல் 60 வயது வரை உள்ள நபர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டண முறையில் பூஸ்டர் தடுப்பூசி போடும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 250-க்கு கீழ் குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுப்பூசிதான். 92.32 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 1.37 கோடி பேர் இதுவரை 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 44 லட்சம் பேர் இன்னும் முதல் தவணையே போடாமல் உள்ளனர்.
உருமாற்றம் அடைந்து வரும் கரோனாவைக் கண்டு பதற்றப்பட வேண்டாம். தமிழகத்தில் எக்ஸ்-இ வகை கரோனா பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. வரக்கூடிய மாதிரிகள் அனைத்தும் ஒமைக்ரான் வகைகளே உள்ளன.
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அரசு நினைக்கிறது. ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்கள் பயில்வதற்கான கட்டுமானம் உள்ள நிலையில், 100 பேருக்கு மட்டுமே சேர்க்கை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனவேதான், அங்கு மீதமுள்ள 50 இடங்களில், மதுரை எய்ம்ஸ் மாணவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தின்மூலம் இதுவரை 43,613 பேர் பயனடைந்துள்ளனர். விபத்துகளில் பாதிக்கப்படுவோர் மூளைச்சாவே அடையாத நிலையை கொண்டு வர வேண்டும் என்பதே இலக்கு என்றார்.
ஆய்வின்போது, டீன் கே.வனிதா, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், உதவி நிலைய மருத்துவ அலுவலர் சித்ரா, துணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) லட்சுமி உடனிருந்தனர்.