ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் தேச விரோத கோஷம் எழுப்பிய குற்றச்சாட்டில், 13 பேரை, ஜம்மு மற்றும் காஷ்மீர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர்களுக்கு எதிராக பொது பாதுகாப்பு சட்டம் (PSA) ஆவணத்தை தயார் செய்து வருவதாகவும், மேலும் பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
ஸ்ரீநகர் மசூதியில் ஒன்றுகூடிய இளைஞர்கள், தேச விரோத கோஷங்களை எழுப்பும் காணொலியும் சமூக வலைதளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2019 அன்று, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்துச செய்யப்பட்டதை அடுத்து, பாதுகாப்பு காரணங்களால் ஸ்ரீநகரில் உள்ள ஜாமியா மசூதி மூடப்பட்டது.
மேலும் கொரோனா தொற்று காரணமாகவும் மசூதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருந்தது. தற்போது, கொரோனா பரவல் குறைந்ததால், வெள்ளிக்கிழமை தான் மசூதியில் ஜமாஅத் தொழுகையை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமையன்று சுமார் 24,000 பேர் மசூதியில் இருந்ததாக தெரிகிறது
இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது, “ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையை சீர்குலைக்கவும், பங்கேற்பாளர்களைத் தூண்டிவிட்டு சட்டம்-ஒழுங்கு நிலைமையை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்ட சதித்திட்டம் இதுவாகும். இதன் பின்னணியில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் உள்ளனர்.
வெவ்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. கோஷம் எழுப்பிய இரண்டு முக்கிய தூண்டுதல்களான பஷரத் நபி பட் மற்றும் உமர் மன்சூர் ஷேக் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர், ஜாமியா மசூதிக்குள்ளும் வாயிலிலும் கோஷமிடுதல் மற்றும் சண்டையில் ஈடுபட்ட மேலும் 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் பல சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும் பலரது பங்கு உறுதியானால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என தெரிவித்தனர்.