மதுரை:
தமிழகத்தில் நடைபெறும் கோவில் திருவிழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மதுரை சித்திரை திருவிழா. மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்படும் சித்திரை திருவிழாவை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வருவதுண்டு.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக புகழ் பெற்ற சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்பின்றி நடந்தது. தற்போது கொரோனா விதிகள் முடிவுக்கு வந்ததால் இந்த ஆண்டு சித்திரை திருவிழா பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக நடந்து வருகிறது.
கடந்த 5-ந்தேதி மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை வேளைகளில் மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் ஆகியோர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். வீதி உலாவின்போது சிறுவர்-சிறுமிகள் பல்வேறு சாமி வேடத்தில் வந்தது பார்ப்போரை வியக்க வைத்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் 14-ந்தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
திருக்கல்யாணத்தை காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் திரள்வதுண்டு. இதற்காக டிக்கெட் விற்பனை ஏற்கனவே தொடங்கி உள்ளது. இதுதவிர இலவச தரிசனத்திற்கான ஏற்பாடுகளும் கோவில் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.
15-ந்தேதி மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியாக தேரோட்டம் நடக்கிறது. இதிலும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இதேபோல் அன்றைய தினம் மதுரை மூன்றுமாவடியில் கள்ளழகர் எதிர்சேவையும், மறுநாள் (16-ந்தேதி) வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.
இதனை முன்னிட்டு சித்திரை திருவிழாவை பாதுகாப்பாக நடத்தவும், பொதுமக்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாகவும் கலெக்டர் அனீஷ்சேகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கி பேசினர்.
பக்தர்கள் பாதுகாப்புக்காக சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, 1500 தூய்மை பணியாளர்கள் மூலம் சுகாதாரம் மற்றும் துப்புரவு பணிகள் மேற்கொள்வது என அவர்கள் தெரிவித்தனர். மேலும் பக்தர்கள் வசதிக்காக குடிநீர்,கழிப்பறை வசதிகள் போன்றவற்றை ஏற்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் அவர்கள் ஆலோசனைகள் வழங்கினர்.
இதேபோல் கள்ளழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், மண்டகப்படிகளில் எழுந்தருள்வது போன்ற வைபவங்களின்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் நடவடிக்கை எடுப்பது போன்றவை குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், பூமிநாதன் எம்.எல்.ஏ., மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் செல்லத்துரை, கள்ளழகர் கோவில் துணை ஆணையர் (பொறுப்பு)அனிதா உள்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.