மாடித் தோட்டம், காய்கறித் தோட்டம், ஊட்டச்சத்து தளைகள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும்போது, பல்வேறு குளறுபடிகள் நிலவுவதாக பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாடித் தோட்டம், காய்கறித் தோட்டம் அமைப்பதற்கு விண்ணப்பிக்கும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆன்-லைனில் முதலில் விண்ணப்பிப்போருக்கு, முன்னுரிமை அடிப்படையில் மாடித் தோட்டம், காய்கறித் தோட்டம் தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு மாடித் தோட்டம், காய்கறித் தோட்டம் அமைக்க மானியவிலையில் செடி, விதைகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்தஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிவைத்தார்.
முதல்வரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டத்தின் கீழ் ரூ.6.75 கோடியில், நகர்ப்புறப் பகுதிகளில் ரூ.900 மதிப்பிலான 6 வகை காய்கறி விதைகள், செடி வளர்க்கும் பைகள், தென்னை நார்க் கட்டிகள், 400 கிராம் உயிர் உரங்கள், 200 கிராம் உயிரி கட்டுப்பாட்டுக் காரணி, 100 மி.லி. இயற்கை பூச்சிக் கொல்லி மருந்து, வளர்ப்புக் கையேடு ஆகியவை அடங்கிய மாடித் தோட்ட தளைகளை ரூ.225 என்ற மானிய விலையில் வழங்கப்படுகின்றன.
இந்த திட்டத்தின் கீழ் ஒருவருக்கு அதிகபட்சம் 2 மாடித்தோட்ட தளைகள் வழங்கப்படும். அதேபோல, கிராமப் பகுதிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க ரூ.90லட்சம் செலவில், ரூ.15-க்கு கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய், தக்காளி, அவரை, பீர்க்கன், புடலை, பாகற்காய் சுரைக்காய், கொத்தவரை, சாம்பல் பூசணி, கீரைகள் அடங்கிய 12 வகை காய்கறி விதை தளைகள் வழங்கப்படுகின்றன. இதையும் 2 தொகுப்புகள் வரை ஒருவர் பெற முடியும்.
ஊட்டச்சத்து தளைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட பழங்கள், காய்கறிகளை வளர்க்கும் திட்டத்துக்கு ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.25-க்குபப்பாளி, எலுமிச்சை, முருங்கை, கருவேப்பிலை, திப்பிலி, கற்பூரவல்லி, புதினா, சோற்றுக்கற்றாழை ஆகிய செடிகள் கொண்ட ஊட்டச்சத்து தளைகள் வழங்கப்படுகின்றன. ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சம் ஒரு தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
இந்த திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாடித் தோட்டத்துக்கு மட்டும் விண்ணப்பித்த சிலருக்கு, காய்கறித் தோட்டம், ஊட்டச்சத்து தளைகள் திட்டத்துக்கும் சேர்த்து விண்ணப்பித்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதுகுறித்து பயனாளி ஒருவர் சம்பந்தப்பட்ட தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநரிடம் விசாரித்ததற்கு “அது தானாக பதிவாகியிருக்கும்” என்று கூறியுள்ளார். எனவே, ஒருவரின் ஆதார் எண்ணைக் கொண்டு மற்றவர்களுக்கு பதிவு செய்து, செடி, தளைகள் வழங்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் சந்தேகம் எழுந்துள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும்போது, “நகர்ப்புறப் பகுதிகளில் மாடித் தோட்டத்துக்கும், கிராமப் பகுதிகளில் காய்கறித் தோட்டத் தொகுப்புக்கும் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், ஒரு தொகுப்புக்கு மட்டும்விண்ணப்பித்தவருக்கு, 3 தொகுப்புகளுக்கும் சேர்த்து குறுஞ்செய்தி வந்தது குறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.