தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பாராளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளிம்பு நிலை மக்களாக நரிகுறவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில், பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன்; மீன் வளம் – மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின்போது 52 நரிக்குறவ குடும்பங்களுக்கு அவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார்கள். இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் செல்போன்கள் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து பேசிய கனிமொழி எம்பி, “தமிழக அரசு எடுத்த உரிய நடவடிக்கை காரணமாக, நரிக்குறவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் ஜனநாயக கடமையான ஓட்டுரிமையும் கடந்த தேர்தலில் அளிக்கப்பட்டது. இவையாவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாகும். கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை அதிமுக அரசு செவி சாய்க்கவில்லை. இதனால் பல இன்னல்களுக்கு மாற்றுத்திறனாளிகள் தள்ளப்பட்டனர். ஆனால் திமுக ஆட்சி ஏற்பட்டு தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், மாற்றுத் திறனாளிகளுக்கு வேண்டிய பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவையாவும் `மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை செய்வது, எங்களின் கடமை’ என்ற வகையில் இந்த திமுக ஆட்சி செயல்பட்டு வருவதையே காட்டுகிறது.
இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வழங்கிய ரூ. 33 லட்சம் மதிப்பிலான கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தைத் துவக்கி வைத்து, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களும், நரிக்குறவர்களுக்கு இலவச பட்டாவும் வழங்கினேன். (1/2) pic.twitter.com/6I6jBuUeIr
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 10, 2022
நரிக்குறவ இன பெண்களுக்கு, சிறு வயதிலே திருமணம் செய்து வைக்கப்படுவதை காணமுடிகிறது. இதை ஒழிக்க, பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். அதன் மூலம் இந்த (நரிக்குறவர்கள்) சமுதாயம் நல்ல நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் வழங்குவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் படித்து சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் விருப்பமும்கூட” என்றார்.
முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கழிவு நீர் சேகரிக்கும் 2 வாகனங்களை மாநகராட்சி பயன்பாட்டிற்கு கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் கீதாஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் சண்முகையா, மார்கண்டேயன், ஊர்வசி, அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சமீபத்திய செய்தி: “கொலையை விட பாலியல் வன்கொடுமை கொடூரமானது” – மும்பை போக்சோ நீதிமன்றம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM