வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்: ஆட்சி மாற்றத்திற்கு காரணமான வெளிநாட்டு சதிக்கு எதிராக பாகிஸ்தானில் மீண்டும் சுதந்திர போராட்டத்தை துவங்க வேண்டும் என அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமராக இருந்த பாகிஸ்தான் தெக்ரீஹ் இ இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான் தோல்வியடைந்தார். இதனால், அவரது பதவி பறிபோனது. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வெளிநாட்டின் சதியே என இம்ரான் கான் திரும்ப திரும்ப கூறி வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடும்படி அழைப்பு விடுத்துள்ளார்.
இந்நிலையில், பதவியில் இருந்து விலகிய பின்னர் இம்ரான் கான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 1947ம் ஆண்டு பாகிஸ்தான் விடுதலை பெற்றது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக வெளிநாட்டு சதிக்கு எதிராக மீண்டும் சுதந்திர போராட்டம் இன்று மீண்டும் துவங்குகிறது. நாட்டின் இறையாண்மை மற்றும் ஜனநாயகத்தை எப்போதும் காப்பது மக்கள் தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் இம்ரான் கான் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் பாவத் சவுத்ரி கூறுகையில், எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் பதவிக்கு களம் இறக்கப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரீப் குறித்த எங்களின் புகார் குறித்து சரி செய்யப்படாவிட்டால், எங்களது உறுப்பினர்கள் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்வார்கள் எனக்கூறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Advertisement