கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் கபூர் அலி முல்லா. இவர் சொந்தமாக குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இதை கடந்த 6-ந்தேதி பந்தயம் ஒன்றுக்காக கொண்டு சென்றார்.
இரவில் பந்தயம் முடிந்ததும் குதிரையை வீட்டுக்கு கொண்டு செல்வது எப்படி? என யோசித்தார். அப்போது அவருக்கு விபரீத எண்ணம் தோன்றியது. அதாவது பயணிகள் ரெயிலில் தனது குதிரையையும் அழைத்து சென்றால் எப்படி? என எண்ணினார். அதை அப்படியே செயல்படுத்தவும் செய்தார்.
இதற்காக தக்ஷின் துர்காபூர் ரெயில் நிலையத்துக்கு குதிரையை அழைத்து சென்ற அவர், அங்கிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ள தனது சொந்த ஊரான நேத்ராவுக்கு, டயமண்ட் ஹார்பர் புறநகர் ரெயிலில் குதிரையை கொண்டு சென்றார்.
நெரிசல் மிகுந்த அந்த ரெயிலில் பயணிகளுடன், குதிரையும் ஒன்றாக பயணித்தது. இதைப்பார்த்த ரெயில் பயணிகள் ஆச்சரிய மிகுதியில் அதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர்.
இது வைரலாக பரவியதால், ரெயில்வே உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
உடனடியாக இது குறித்து அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் கபூர் அலி முல்லா மீது வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.