வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக உறவுகளை கொண்டாடும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு பிடித்த இந்திய உணவு வகையான, ‘கிச்சடி’யை சமைத்து, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் அசத்தி உள்ளார்.
நம் பிரதமர் நரேந்திர மோடியுடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் நெருக்கமான நட்புறவு வைத்துள்ளார்.சமீபத்தில் கையெழுத்தான வரியற்ற பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம், இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுபடுத்தும் வகையில் அமைந்தது.
இந்நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான வர்த்தக உறவுகளை கொண்டாடும் விதமாக, தன் குடும்பத்திற்காக, இந்திய உணவு வகையான கிச்சடியை, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் சமைத்துள்ளார்.
இதுகுறித்த புகைப்படத்தை சமூக வலை தளத்தில் பகிர்ந்த மாரிசன், அதில் குறிப்பிட்டுள்ளதாவது:இந்தியாவுடன் செய்யப்பட்டுள்ள புதிய வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டாடும் விதமாக, என் அன்பு நண்பரும், இந்திய பிரதமருமான நரேந்திர மோடியின் சொந்த ஊரான குஜராத்தில் புகழ்பெற்ற கிச்சடி உணவு வகையை, நான் ஆஸி.,யில் சமைத்துள்ளேன்; இது, அவருக்கு மிகவும் பிடித்த உணவு.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடிக்காக, இந்திய உணவை ஸ்காட் மாரிசன் செய்வது, இது முதல் முறையல்ல. 2020 மே மாதம், இந்திய சிற்றுண்டி வகையான சமோசாக்களை செய்து, சமூக வலை தளத்தில், அவர் பதிவிட்டிருந்தார்.
Advertisement