லக்னோ: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கை சுமார் 40 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இவருடைய முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. சுமார் 29 நிமிடங்கள் கணக்கு முடக்கப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் அலுவலக அதிகாரி கூறுகையில், ‘இரவு 29 நிமிடங்கள் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. இந்த கணக்கில் இருந்து 400-500 பதிவுகளை ஹேக்கர்கள் அனுப்பியுள்ளனர்,’ என்றார். இது குறித்து உபி அரசு வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு முதல்வர் அலுவலகத்தின் டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது. சில பதிவுகள் ஹேக்கர்கள் மூலமாக அனுப்பப்பட்டு இருந்தன. அவை உடனடியாக திரும்ப பெறப்பட்டன. இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இணைய வல்லுநர்கள் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்,’ என கூறப்பட்டுள்ளது.