ரஷிய படைகளின் போர் குற்றங்களுக்கு ஆதாரம் இருக்கிறது: உக்ரைன் அதிபர்

ரெயில் நிலைய தாக்குதல் பலி 52 ஆனது
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அவ்விருநாடுகளையும் தாண்டி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. என்றைக்குத்தான் இந்தப்போர் முடிவுக்கு வரப்போகிறதோ என்று ஒவ்வொருவரும் எண்ணத்தலைப்பட்டுள்ளனர்.

எதிர்பார்த்த அளவுக்கு ரஷியாவால் வெற்றி பெற முடியவில்லை. அந்த நாடு, உக்ரைனில் ராணுவ கட்டமைப்புகளை தாண்டி தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதுதான் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.
நேற்று முன்தினம் கிழக்கு உக்ரைனில் கிராமடோர்ஸ்க் நகர ரெயில் நிலையத்தின்மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை நேற்று 52-ஆக உயர்ந்தது. இந்த தாக்குதலை சொல்வதற்கு வார்த்தையே இல்லை, இழிந்த நடத்தைக்கு அவர்கள் எந்த அளவுகோலையும் கொண்டிருக்கவில்லை என்று ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா கூறினார்.
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பிராந்தியத்தை உக்ரைன் படைகள் சென்றடைய ரெயில்வே கட்டமைப்புகள் முக்கியம் என்பதால், அவற்றின்மீது ரஷியா குறி வைத்துள்ளது என்று லண்டன் ஆராய்ச்சி நிபுணர் ஜஸ்டின்பிராங்க் கருத்து தெரிவித்துள்ளார்.
போர் குற்றங்களுக்கு ஆதாரம்
ரஷிய துருப்புகள், உக்ரைனில் நடத்தி உள்ள போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை வழங்கும் தகவல் தொடர்புகளை தனது நாட்டின் பாதுகாப்பு சேவை இடைமறித்து பதிவு செய்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி அமெரிக்காவின் சி.பி.எஸ். டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
இந்தப் பேட்டியின்போது அவர் கூறியதாவது:-
ரஷிய படையினர் தங்கள் பெற்றோரிடம் பேசும்போது தாங்கள் திருடியது என்ன, யாரை கடத்தி உள்ளனர் என்றெல்லாம் பேசி உள்ளனர். மக்களை கொன்றதாக அவர்கள் கூறியதின் பதிவுகள் எங்களிடம் உள்ளன.
அப்பாவி மக்களை கொல்வதற்கு இலக்கு
அப்பாவி மக்களை கொல்வதற்கு இலக்குகளை கொண்டுள்ள வரைபடங்களை வைத்திருந்த விமானிகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது.
புச்சாவில் நடந்த படுகொலைகளைப் போலவே, பல போர்க்குற்றங்கள்போலவே, கிராமடோர்ஸ்க் ரெயில் நிலையம் மீதான ராக்கெட் தாக்குதலும் அமைந்துள்ளது. இதுகுறித்து நீதியின் முன் அவர்களை நிறுத்த வேண்டும், யார் என்ன செய்தார்கள், என்ன உத்தரவிட்டார்கள், அந்த ராக்கெட்டுகள் எங்கிருந்து வந்தன, யார் அதைக்கொண்டு வந்தார்கள், போர் குற்றங்களை நிறைவேற்றியது யார் என்பதுவரை நிலைநிறுத்த முயற்சிகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷிய அதிபர் புதினும் பொறுப்பு என்கிறீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பொறுப்பேற்க வேண்டியவர்களில் அவரும் ஒருவர் என நம்புகிறேன் என பதில் அளித்தார்.
10 மனிதாபிமான வழித்தடங்கள்

உக்ரைன் போரையொட்டிய பிற நிகழ்வுகள் இவை:-
* கிழக்கு உக்ரைனிய நகரங்களான ரூபிஸ்னே, போபாஸ்னே, மரிங்கா நகரங்களை கைப்பற்றுவதில் ரஷியா கவனம் செலுத்துகிறது. நாட்டின் வடக்கு பகுதிகளில் இருந்து வெளியேறிய நிலையில், கிழக்கு உக்ரைனில் தாக்குதலை ரஷியப்படைகள் தீவிரப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பால் அங்கிருந்து மக்களை வெளியேறி விடுமாறு உக்ரைன் அரசு வலியுறுத்தி உள்ளது.
பொதுமக்கள் வெளியேற 10 மனிதாபிமான வழித்தடங்கள் அமைக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா பகுதிகளில் உள்ள பல நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற இந்த மனிதாபிமான வழித்தடங்கள் உதவும். மரியுபோல் நகர மக்களும் வெளியறே மனிதாபிமான வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* மரியுபோல் நகரம் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் இன்னும் நீடிக்கிறது. அதே நேரத்தில் ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதில் உக்ரைன் படைகள் தீவிரம் காட்டுகின்றன. மேற்கு கெர்சனில் ரஷிய படைகள் கைப்பற்றிய பகுதிகளை மீட்பதில் உக்ரைன் படைகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
* வடக்கு நகரமான கார்கிவ் நகரத்தில் இருந்து வெளியேறும் ரஷிய படைகள், உக்ரைனிய எதிர்தாக்குதல்களை எதிர்நோக்கி செல்லும்போது, கண்ணிவெடிகளை பதிப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
* மத்திய உக்ரைனில் மைரோராட் விமானப்படை தளத்தில் உள்ள வெடிபொருட்கள் கிடங்கின் மீது தாக்குதல் தொடுத்து ரஷிய படைகள் அழித்துள்ளன. இதில் எம்.ஐ.ஜி.-29 ரக போர் விமானம், எம்.ஐ-8 ரக ஹெலிகாப்டர் அழிக்கப்பட்டுள்ளன.
படை தலைமை மாற்றம்
* உக்ரைனில் ரஷிய படைகள் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிற நிலையில் அங்கு ரஷிய படைகளுக்கு தலைமை ஏற்கும் பொறுப்பு ஜெனரல் அலெக்சாண்டர் டுவோர்னிகோவுக்கு வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் ெவளியாகி உள்ளன. சிரியாவில் ரஷிய செயல்பாடுகளில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
* தலைநகர் கீவில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள மக்காரிவ் என்ற இடத்தில் 132 உடல்கள் காணப்பட்டுள்ளதாக உள்ளூர் இணையதளம் தகவல் வெளியிட்டு இருப்பது அங்கு பதை பதைப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.