உக்ரைன், நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ம் தேதி முதல் உக்ரைன் மீது ராணுவத் தாக்குதல்களை நடத்திவருகிறது. போரை நிறுத்துவதற்காக ரஷ்யத் தரப்பினரும், உக்ரைன் தரப்பினரும் ஏற்கெனவே பலமுறை அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் எந்தவொரு குறிப்பிடத்தகுந்த முடிவுகளும் எடுக்கப்படாததால், உக்ரைனில் போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. போரின் காரணமாக அனைத்து நாடுகளிலும் விலைவாசி உயர்ந்து, மக்கள் பல்வேறு பிரசனைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைன் பொருளாதார அமைச்சர் யூலியா ஸ்விரிடென்கோ தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், “ரஷ்யாவில் இறக்குமதியாகும் அனைத்துப் பொருள்களுக்கும் உக்ரைன் அரசு அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது. இனிமேல் ரஷ்யக் கூட்டமைப்பின் எந்த ஒரு தயாரிப்புகளையும் உக்ரைன் அரசு எல்லைக்குள் இறக்குமதி செய்ய முடியாது.
உக்ரைன் அதிபர் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் பிற ஏற்றுமதிகளை புறக்கணிக்கவும் மேற்கத்திய நாடுகளுக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளார்.ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய யூனியனும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. அதேபோல மற்ற நாடுகளும் ரஷ்யாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்