உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவில் உள்ள முன்னணி டெக் நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றன. கடந்த வாரத்தில் உலகின் பெரும் தொழில்நுட்ப நிறுவனமான Infosys ரஷ்யாவை விட்டு வெளியேறியது.
அதேபோல, சிலிக்கான் வேலி நிறுவனங்கள் பல, ரஷ்யாவில் தாங்கள் மேற்கொண்டுவந்து தொழில்களை நிறுத்தியுள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், சமுக வலைத்தள நிறுவனமான மெட்டாவும் தங்களின் செயல்பாடுகளை நிறுத்தியுள்ளது.
இச்சூழலில், ரஷ்யாவின் நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒளிபரப்பும் யூடியூப் வலையொளி பக்கத்தை கூகுள் முடக்கியுள்ளது. இதற்கு ரஷ்யா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இதற்கான விளைவுகளை நிறுவனம் சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிரடி காட்டும் ரஷ்யா – Instagram இஸ் நோ மோர்!
தடை செய்யப்பட்ட ரஷ்ய யூடியூப் பக்கம்
அமெரிக்க நிறுவனங்கள் ரஷ்யர்களின் உரிமைகள் மீது கைவைக்கிறது என நாடாளுமன்றத்தின் கீழ் சபை பேச்சாளர் வியாசெஸ்லாவ் வோலோடின் தனது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். தகவல்களின் பரவலை தடுத்து, அமெரிக்க உரிமைகளை பெற விரும்புவதாக அவர் தனது டெலிகிராம் மூலம் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, யூடியூப் அதன் தலைவிதியை தானே தேடிக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார். மேலும், ரஷ்ய மக்கள் தங்கள் YouTube கணக்குகளில் இருந்து உடனடியாக வெளியேறி, ரஷ்ய தளங்களை பயன்படுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை அவர் டெலிகிராம் வாயிலாக பதிவிட்டுள்ளார்.
சேனல் அணுக முடியவில்லை என AFP செய்தியாளர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். அனைத்தும் சட்டமுறைப்படி நடந்துள்ளதாகவும், தங்களின் நிறுவனம் எந்த விதிகளையும் மீறவில்லை எனவும் AFP செய்தி ஊடகத்திற்கு கூகுள் விளக்கம் அளித்துள்ளது. ஒரு கணக்கு எங்கள் சேவை விதிமுறைகளை மீறுவதாக நாங்கள் கண்டறிந்தால், தகுந்த நடவடிக்கை எடுப்போம் எனவும் கூகுள் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம்-க்கு குட் பை – ரஷ்யாவின் புதிய ‘Rossgram’ ஆப்!
ரஷ்யாவில் கூகுளுக்கு தடை வருமா?
ரஷ்ய நாடாளுமன்றத்தின் பிரத்யேக யூடியூப் சேனலான Duma-TV 1,45,000 க்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டிருந்தது. இது நாடாளுமன்ற விவாதங்கள், சட்டங்கள் நிறைவேற்றும் உறுப்பினர்களின் நேர்காணல் போன்ற வீடியோக்களை ஒளிபரப்பும் தளமாகும்.
அரசு சாராத தளங்களை முடக்க ரஷ்ய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. அந்த வகையில் சில தினங்களுக்கு முன் ரஷ்யா இயற்றிய புதிய போலி செய்தி சட்டத்தின் கீழ் ‘இன்ஸ்டாகிராம்’ மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இன்ஸ்டா தளத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலாக உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ‘Rossgram’ அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கூகுளின் இதுபோன்ற நடவடிக்கைகளால் எரிச்சலடைந்துள்ள ரஷ்ய அரசு, விரைவில் உலகின் மிகப்பெரும் டெக் நிறுவனத்திற்கு தடை விதிக்கக்கூடும் என தகவல்கள் கசிந்துவருகின்றன. கூகுள் தொடர்ந்து உக்ரைன் நாட்டில் வெளியிடப்படும் செய்திகளை நியாப்படுத்தி வருவதாகவும் ரஷ்யா குற்றஞ்சாட்டி வருகிறது.