உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், மாயாவதிக்கு முதலமைச்சர் பதவி தருவதாக, ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், அது குறித்து, மாயாவதி கருத்துத் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நேற்று, புத்தக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “நடந்து முடிந்த உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால், முதலமைச்சர் பதவி தருவதாக,
பகுஜன் சமாஜ்
கட்சித் தலைவர் மாயாவதியிடம் தெரிவித்தோம். ஆனால் அவர் இது தொடர்பாக எங்களிடம் பேசவில்லை. உத்தர பிரதேச மாநிலத்தில், மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கு மாயாவதி வழி ஏற்படுத்தி தந்து விட்டார்” என தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று, ராகுல் காந்தியின் கருத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான மாயாவதி பதில் கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் மாயாவதி கூறியதாவது:
ராகுலின் கருத்துகள், தலித்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி குறித்து அவரின் தாழ்வு மனப்பான்மையையே காட்டுகிறது. சொந்த பாதையை நிர்ணயிக்க முடியாமல், சொந்த கட்டமைப்பை உருவாக்க முடியாத காங்கிரஸ், அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடுகிறது.
பகுஜன் சமாஜ் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்னர், ராகுலும், காங்கிரசும் 100 முறை சிந்திக்க வேண்டும். பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும், காங்கிரஸ் இல்லாத இந்தியாவாக மட்டும் இல்லாமல், எதிர்க்கட்சிகளே இல்லாத தேசமாக மாற்றி, கிராமம் முதல் தேசிய அளவில் வரை, சீன அரசியலமைப்பு போல் ஒரே கட்சி ஆட்சி முறையை கொண்டு வர முயற்சிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் வலுக்கட்டாயமாக பிரதமரை ராகுல் காந்தி கட்டியணைத்தது போன்ற கட்சி நாங்கள் அல்ல. உலகம் முழுவதும் வேடிக்கை பார்க்கும் கட்சி நாங்கள் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.