லக்னோ-லக்னோ ஐ.ஐ.ஐ.டி., மாணவருக்கு அயர்லாந்தில் உள்ள ‘அமேசான்’ நிறுவனத்தில், ஆண்டுக்கு 1.20 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது
.உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் லக்னோவில் இந்திய தகவல் தொழில்நுட்ப மையமான ஐ.ஐ.ஐ.டி., உள்ளது. இதில், பி.டெக்., இறுதியாண்டு படிக்கும் மாணவர் அபிஜித் திவிவேதியை, அமேசான் நிறுவனம் தேர்வு செய்துள்ளது. இவருக்கு ஐரோப்பிய நாடான அயர்லாந்து தலைநகர் டப்லினில், ஆண்டுக்கு, 1.20 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளது.
இது, இதுவரை லக்னோ ஐ.ஐ.ஐ.டி., மாணவர்கள் யாரும் பெறாத ஊதியமாகும். இது குறித்து அபிஜித் திவிவேதி கூறியதாவது:நேர்முகத் தேர்வுக்கு பல ‘வீடியோ’ பதிவுகளை பார்த்து தயாரானேன். தேர்வில் வெற்றி பெற வெறும் தொழில்நுட்ப அறிவு மட்டும் போதாது. ‘சாப்ட் ஸ்கில்’ எனப்படும் திறமையாக பேசுவது, உடல் மொழி உள்ளிட்டவை அவசியம். நான் பல மூத்த பட்டதாரிகளிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன்.
அவர்களிடம் நேர்முகத் தேர்வில் எப்படி செயல்பட வேண்டும் என்ற உத்திகளை அறிந்து அதன்படி செயல்பட்டேன். என் வெற்றிக்கு இது தான் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.லக்னோ ஐ.ஐ.ஐ.டி., யில் இந்தாண்டு படித்த அனைவருக்கும் வேலை கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஒரு மாணவருக்கு, அதிகபட்சமாக ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது.
Advertisement