ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும் என சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்திற்கு எதிர்வினையாற்றும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் “நாங்கள் எங்கள் தாய் மொழியை நேசிக்கிறோம். நாங்கள் பன்முகத் தன்மையை விரும்புகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்க வேண்டும். அதுவே தேசிய ஒருமைப்பாட்டிற்கான வழி. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. ” என்று கூறினார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன.
உள்துறை அமைச்சரின் பேச்சு இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என்று கடுமையாக விமர்சித்து இருந்தார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளை மேற்கோளிட்டு, “தமிழணங்கு” ஓவியத்தை தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் இந்த சர்ச்சை குறித்து தனது கருத்தை வெளியிட்டு உள்ளார்.
Don’t try to break Homes Mr Home Minister … We DARE YOU #stopHindiImposition we love our diversity..we love our Mother tongue… We love our Identities..#JustAsking pic.twitter.com/6eysDCqcnH
— Prakash Raj (@prakashraaj) April 8, 2022
“வீடுகளை உடைக்க முயற்சிக்காதீர்கள் உள்துறை அமைச்சரே! நாங்கள் தைரியமானவர்கள். நீங்கள் இந்தித்திணிப்பை நிறுத்துங்கள். நாங்கள் தேசத்தின் பன்முகத் தன்மையை விரும்புகிறோம். நாங்கள் எங்கள் மொழியை நேசிக்கிறோம். எங்கள் அடையாளங்களை விரும்புகிறோம்.” என்று தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரகாஷ் ராஜ்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM