வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘மும்பையில் ௨௦௦௮ல் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது மகன் ஹபீஸ் தல்ஹா சயீதை, பயங்கரவாதி என, மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது,.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், ௨௦௦௮ நவ., ௨௬ல் பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் ௧௬௬ பேர் இறந்தனர்.இந்த தாக்குதலை, பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் – இ- தொய்பா பயங்கரவாதிகள் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர், லஷ்கர் பயங்கரவாத அமைப்பை துவக்கிய ஹபீஸ் சயீது. மத்திய அரசு, சில ஆண்டுகளுக்கு இவரை பயங்கரவாதி என, சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் அறிவித்தது.
இந்நிலையில், இவரது மகன் ஹபீஸ் தல்ஹா சயீதை, ௪௬, பயங்கரவாதி என அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஹபீஸ் தல்ஹா சயீது, பாகிஸ்தானின் லாகூரில் வசித்து வருகிறார். லஷ்கர் பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது, நிதி திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
இந்தியா மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதிகளை திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்றுள்ள தல்ஹா சயீது, இந்தியாவுக்கு எதிராக ‘ஜிகாத்’ எனப்படும் புனிதப் போரில் ஈடுபடுவது குறித்து, தீவிரமாக பிரசாரம் செய்துள்ளார். அதனால், அவரை பயங்கரவாதி என அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement