இந்தியாவுக்குள் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கடல்வழியாக நுழைந்த பயங்கரவாதிகள் 10 பேர் மும்பை ரயில் நிலையம், தாஜ் நட்சத்திர ஹோட்டல் உள்ளிட்டவற்றில் தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் கொல்லப்பட்டனர், ஏராளமானோர் காயமடைந்தனர். இதில் 9 பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். அஜ்மல் கசாப் என்ற
பயங்கரவாதி
மட்டும் உயிருடன் பிடிக்கப்பட்டார். வழக்கு விசாரணைக்குப் பிறகு அவர் தூக்கிலிடப்பட்டார்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டது பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு என இந்தியா உறுதி செய்தது. இந்த தாக்குதல்களை ஜமாத் உத் தாவா மற்றும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கங்களை நிறுவிய
ஹபீஸ் சயீத்
பாகிஸ்தானில் இருந்தவாறு நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியது. சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத்துக்கு பல்வேறு வழக்குகளின் கீழ், 32 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி
பாகிஸ்தான்
நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 70 வயதான ஹபீஸ் சயீத் ஏற்கனவே வேறொரு வழக்கில் 36 ஆண்டு கால சிறை தண்டனை பெற்றுள்ளார்.
பாகிஸ்தான் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் நேற்று வழங்கப்பட்ட சிறை தண்டனையுடன் சேர்த்த மொத்தம் 68 ஆண்டு காலம் ஹபீஸ் சயீத் சிறையில் கழிக்க வேண்டும். இந்த நிலையில், ஹபீஸ் சயீத்தீன் மகன் டல்ஹா சயீத்தை பயங்கரவாதி என இந்தியா அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் லாகூரில் வசிக்கும்
ஹபீஸ் டல்ஹா சயீத்
லஷ்கர் இ தொய்பா அமைப்பின் மூத்த தலைவராகவும், அதன் மத அமைப்பின் தலைவராகவும் உள்ளார். இவரை பயங்கரவாதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், “ஹபீஸ் டல்ஹா சயீத், பாகிஸ்தான் முழுவதும் உள்ள லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் மையங்களுக்கு சென்று, இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். இவர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளார் என மத்திய அரசு நம்புகிறது. எனவே அவர் சட்டப்படி பயங்கரவாதி என அறிவிக்கப்பட வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 35, உட்பிரிவு (1) உட்பிரிவு (ஏ) யின் ஷரத்து, ஒருவர் பயங்கரவாதத்தில் ஈடுபட்டதாக நம்பினால் அவரை நான்காவது அட்டவணையில் பயங்கரவாதி என சேர்த்து அறிவிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.