என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என்று, ஹிந்தி மொழி விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் கே.டி. ராமாராவ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர்
அமித் ஷா
, “அலுவல் மொழியான ஹிந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்து விட்டது. ஹிந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும் போது அது ஹிந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
அமைச்சர் அமித் ஷாவின் இத்தகைய கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களது கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களை திசைதிருப்பும் நோக்கில் உள்துறை அமைச்சர்
அமித் ஷா
இப்படி பேசியிருப்பதாக, எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், என்ன மொழி பேச வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும் என்று, ஹிந்தி மொழி விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தெலங்கானா மாநில உள்துறை அமைச்சர் கே.டி. ராமா ராவ் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளமான ட்விட்டரில், கே.டி. ராமா ராவ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:
அன்புள்ள அமித் ஷா அவர்களே, வேற்றுமையில் ஒற்றுமை தான் நம் நாட்டின் பலம். பல மாநிலங்களின் ஒன்றியம் தான் இந்தியா. என்ன மொழி பேச வேண்டும், என்ன உணவு சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கட்டும்.
நான் முதலில் இந்தியன். தெலுங்கு மொழி பேசுபவன் என்பதில் பெருமை கொள்கிறேன். அடுத்ததாக நான் தெலங்கானாவைச் சேர்ந்தவன். என்னால் என்னுடைய தாய்மொழி தெலுங்கிலும், ஆங்கிலம், ஹிந்தியிலும் பேசுவேன். கொஞ்சம் உருது மொழியும் தெரியும். ஆங்கிலத்துக்கான முக்கியத்துவத்தை குறைத்து ஹிந்தியை திணிக்கும் போது இந்திய இளைஞர்கள் உலகளாவிய வாய்ப்புகளை பெறுவதில் தவறி விடுவார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.