புதுடெல்லி:நாடு முழுவதும் 12 வயதினர் முதல் அனைவருக்கும் ஒன்றிய அரசின் சார்பில் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 18 வயது முதல் 59 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்காக, இன்று முதல் தனியார் மருத்துவமனைகள், முகாம்களில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கான அனுமதியை ஒன்றிய அரசு அளித்துள்ளது. ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் கடந்த அனைவரும் இதற்கு தகுதியானவர்கள். இவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படும் நிலையில், அது தொடர்பாக அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச சுகாதார துறை செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் அவர் கூறிய முக்கிய அம்சங்கள் வருமாறு:* பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள விரும்புபவர்கள், மீண்டும் கோவின் இணையத்தில் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. * இந்த தடுப்பூசியை போடுபவர்களின் விவரங்கள் கோவின் இணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.* ஆன்லைனில் முன்பதிவு செய்தோ, நேரில் சென்றோ தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். * கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசியின் விலை ரூ.225 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை செலுத்துவதற்கான சேவை கட்டணமாக அதிகபட்சம் ரூ.150 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்கலாம்.* ஏற்கனவே எந்த தடுப்பூசியை செலுத்தி இருக்கிறார்களோ, அதே தடுப்பூசியே பூஸ்டர் டோசாக செலுத்த வேண்டும். * கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரிக்கும் சீரம் நிறுவனம், தனியார் மருத்துவமனைகளில் ஒரு டோசின் விலையை ரூ.600ல் இருந்து ரூ.225 ஆக குறைப்பதாக நேற்று அறிவித்தது.* அதேபோல், கோவாக்சின் தடுப்பூசியை தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனமும், ஒரு டோஸ் தடுப்பூசி விலையை ரூ.1200ல் இருந்து ரூ.225 ஆக குறைத்துள்ளது.