2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, தென் மாநில முதல்வர்கள் மு.க.ஸ்டாலின், ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் மூவரும் அடுத்தடுத்து தலைநகர் டெல்லி சென்றது தேசிய அரசியலில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
2014, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை வெற்றி பெற்றது. பாஜக பிரதமர் மோடி தலைமையில் தனது 2வது ஆட்சியை நடத்தி வருகிறது. அண்மையில் நடந்து முடிந்த 5 சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வியை சந்தித்தது. காங்கிரஸ் கட்சி தற்போது 2 மாநிலங்களில்தான் ஆட்சியில் இருக்கிறது. இதனால், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றால் பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் உடன் இணைந்தால் மட்டுமே சாத்தியம் என்று அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.
இந்த சூழலில்தான், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆந்திரப் பிரதேச முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அடுத்தடுத்து டெல்லி பயணம் செய்திருப்பது தேசிய அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது. மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் பதவி மீது இலக்கு இல்லை என்றாலும், கிங் மேக்கராக இருப்பார் என்றே அரசியல் வட்டாரங்களில் பலரும் உறுதியாக உள்ளனர்.
மாநிலத்தில் ஆளும் திமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் தொடர்ந்து மோதல் போக்கை மேற்கொண்டு வருகின்றன. நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட விவகாரங்களில் உரசல் தொடர்ந்து வருகிறது.
திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து தொடர்ந்து நட்புறவை பேணி வருகிறது. ஆனால், காங்கிரஸ் மற்ற மாநிலங்களில் மாநிலக் கட்சிகளுடன் திமுகவுடன் இருப்பது போன்ற நட்பு உறவு இல்லை. காங்கிரஸ் கட்சியும் ஒவ்வொரு மாநிலங்களாக இழந்து தற்போது, 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது.
இதனால், மாநிலக் கட்சிகள் 2024 மக்களவைத் தேர்தலை கருத்தில் கொண்டு தங்களை தேசிய அரசியலில் வெற்றி பெற முயற்சி செய்து வருகின்றன.
நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிகையில், திமுக 3வது பெரிய கட்சியாக இருந்ந்தாலும், பாஜகவுக்கு எதிரான கூட்டணி காங்கிரஸ் தலைமையில்தான் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின், தனது சுயசரிதையான ‘உங்களில் ஒருவன்’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நூல் வெளியிட்டு விழாவில், மத்திய பாஜக அரசின் பெரிய அண்ணன் போக்கு குறித்து பேசப்பட்டது. திராவிட மாடல் ஆட்சி என்று மு.க. ஸ்டாலின் முன்வைக்கும் முழக்கமே திராவிட மாடல் என்பது ஏதோ ஒரு மாநிலத்துக்கானது அல்ல. சமூகநீதி பாதையில் இந்தியாவின் மொத்த மாநிலங்களும் பயணிக்கலாம் என்பதுதான். இது திமுகவின் தேசிய அரசியலை நோக்கிய பயணம் என்றே பார்க்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, மு.க. ஸ்டாலின் துபாய் பயணத்தை தொடர்ந்து, தலைநகர் டெல்லிக்கு 3 நாள் பயணம் செய்தார். டெல்லியில் புதியதாக கட்டப்பட்ட திமுக அலுவலகம் திறப்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அதே நேரத்தில், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலை மு.க.ஸ்டாலின் சந்தித்தார். மேலும், டெல்லியில் உள்ள மாதிரிப் பள்ளிகளையும் மொஹல்லா கிளினிக்குகளையும் பார்வையிட்டார். தமிழகத்திலும் விரைவில் டெல்லி மாதிரிப் பள்ளிகளைப் போல அமைக்கப்படும் என்று கூறினார். அதுமட்டுமில்லாமல், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழகம் வர அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பு மு.க. ஸ்டாலினுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஒரு பிணைப்பை உருவாக்கியுள்ளது.
மு.க. ஸ்டாலின் தனது 3 நாள் டெல்லி பயணத்தின் மூலம் தேசிய அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளார். அதே போல, மற்றொரு தென் மாநில முதல்வரான ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இருவரும் அடுத்தடுத்து டெல்லி பயணம் மேற்கொண்டது தேசிய அரசியலில் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகன்மோகன் ரெட்டி மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் எந்த உரலும் இல்லை. அதே நேரத்தில் ஜெகன்மோகன் ரெட்டிக்கும் பாஜகவுக்கும் இடையேயான உறவு என்பது மர்மமாகவே உள்ளது. மாநில வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படும் ஜெகன்மோகன் ரெட்டி, தேசிய அரசியலில் கோலோச்சுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆந்திர மாநிலத்தில், தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்த்து அரசியல் செய்து வருகிறார். அவர் பாஜகவுடன் நட்பில் உள்ளார். இதனால், ஜெயகன் மோகன் ரெட்டியின் தேசிய அரசியல் நகர்வு பாஜகவுக்கு எதிரானதாக இருக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தனது தேசிய அரசியல் விருப்பத்தை 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதே வெளிப்படுத்தினார். மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, சந்திரசேகர ராவ் சந்தித்தார். அதே போல, பாஜக அல்லாத மற்ற மாநில முதல்வர்களையும் மாநிலக் கட்சித் தலைவர்களையும் சந்தித்துள்ளார். இதனால், சந்திரசேகர ராவின் தேசிய அரசியல் ஆசை என்பது வெளிப்படையானது.
மு.க. ஸ்டாலின், ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரசேகர ராவ் மூன்று தென் மாநில முதல்வர்களும் தலைநகர் டெல்லிக்கு சென்று வந்தது கவனத்தைப் பெற்றுள்ளது. இதில், ஸ்டாலின் பிரதமர் நாற்காலி மீது நோக்கம் இல்லாவிட்டாலும் அவர் தனது தந்தை கருணாநிதியைப் போல கிங் மேக்கராக இருப்பார் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், ஜெகன்மோகன் ரெட்டியும் சந்திரசேகர ராவ் இருவரும் கிங் ஆவார்களா கிங் மேக்கர்களாக இருப்பார்களா என்பது 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும்போதுதான் தெரியவரும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“