புதுடெல்லி,
பினாகா ஏவுகணை அமைப்பை புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் மற்றொரு ஆய்வகமான அதிசக்தி பொருட்கள் ஆய்வகத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.
பினாகா ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக பினாகா எம்கே-1 உள்ளது. புதிய தேவைகளுக்கு ஏற்ப, அதிக தொலைவு சென்று தாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இது மேம்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் சோதனை தளத்தில் கடந்த மாத பிற்பகுதியில் 24 பினாகா எம்கே-1 ஏவுகணைகளின் பரிசோதனை நடைபெற்றது. இது வெற்றிகரமாக அமைந்ததாகவும், எதிர்பார்க்கப்பட்ட துல்லியம் மற்றும் தொடர்ச்சியுடன் இந்த ஏவுகணைகள் இலக்குகளை தாக்கியதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தகட்டமாக, இந்த ஏவுகணை பயன்பாடு, தொடர் தயாரிப்புக்கான பரிசோதனைகள் நடைபெறும் என்று அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.
குறைந்த காலத்தில் பினாகா எம்கே-1 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்திய டி.ஆர்.டி.ஓ. குழுக்களுக்கு அதன் தலைவரும், பாதுகாப்பு துறை செயலாளருமான டாக்டர் ஜி.சதீஷ் ரெட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.